< Back
தேசிய செய்திகள்
மால்தாரே கிராமம் அருகே கண்காணிப்பு கேமராவில் புலி நடமாட்டம் பதிவு; கிராம மக்கள் பீதி
தேசிய செய்திகள்

மால்தாரே கிராமம் அருகே கண்காணிப்பு கேமராவில் புலி நடமாட்டம் பதிவு; கிராம மக்கள் பீதி

தினத்தந்தி
|
17 Sept 2022 12:15 AM IST

மால்தாரே கிராமம் அருகே புலி நடமாடி இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

குடகு;


கால்நடைகளை வேட்டையாடி...

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று நடமாடி வருகிறது. அந்த புலி கிராமத்தில் உள்ள கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த புலி 4 பசுமாடுகளை வேட்டையாடி கொன்று இறைச்சியை தின்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காபித்தோட்ட தொழிலாளர்கள், உரிமையாளர்கள், விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைவரும் பீதி அடைந்துள்ளனர்.

கண்காணிப்பு கேமராவில்...

இதற்கிடையே அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் கும்கி யானைகளை வரவழைத்தனர். அவற்றின் உதவியுடன் வனத்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் 4 குழுக்களாக பிரிந்து அந்த புலியை தேடிவருகிறார்கள். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க கிராமத்தையொட்டிய முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மால்தாரே கிராமத்தையொட்டிய பகுதியில் அந்த புலி நடமாடி உள்ளது. இதுதொடர்பான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வனத்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து புலி நடமாடி வருவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்