பெல்தங்கடி அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது
|செம்மரக்கட்டைகள் கடத்திய 2பேரை வனத்துறையினா் கைது செய்தனர்.
மங்களூரு-
பெல்தங்கடி அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 ேபரை வனத்துறையினா் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
வாகன சோதனை
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூா் அருகே கரிமனேலுவில் செம்மரக்கட்டைகளை கடத்துவதாக பெங்களூரு சி.ஐ.டி வனப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பெங்களூரு வனப்பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினர். ஆனால் சரக்கு வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது.
மடக்கி பிடித்தனர்
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் காரில் வேகமாக சென்று சரக்கு வாகனத்தை மடக்கி பிடித்தனர். சரக்கு வாகனத்தில் இருந்து 3 பேர் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்ற வனத்துறையினா் 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்தநிலையில் சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில், செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெல்தங்கடி அருகே உள்ள குருவாயனேகெரேவை சேர்ந்த தீட்சித் மற்றும் மாவினகட்டையை சேர்ந்த காலீத் என்பதும், தப்பியோடியவர் சந்தோஷ் என்பதும் தெரியவந்தது.
பறிமுதல்
பின்பு வனத்துறையினர் 125 கிலோ செம்மரக்கட்டைகள், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து, பெங்களூரு சி.ஐ.டி வனப்பிரிவு போலீசார் வேனூர் வனத்துறையினாிடம் ஒப்படைத்தனர். வேனூர் வனத்துறை அதிகாரி மாஹிம் ஜன்னு, அவா்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
மேலும் தப்பியோடிய சந்தோசை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் சரக்கு வாகனத்தின் மதிப்பு ரூ.6½ லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.