அஜ்ஜாம்புரா அருகே சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி
|அஜ்ஜாம்புரா அருகே சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா மகானஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
அந்த சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்து ஆடு, மாடுகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வருகிறது. சிறுத்தையின் நடமாட்டத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று முன்தினமும் அந்தப்பகுதியில் சிறுத்தை நடமாடி உள்ளது.
இதனை பார்த்து அந்தப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது அந்தப்பகுதி மக்கள், எங்கள் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் நிரந்தரமாக உள்ளது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.