சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
|கெஜ்ரிவால் உதவியாளர் நாளை நேரில் ஆஜராக தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தொடக்கத்தில் மவுனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் சுவாதி மாலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் எனவும், இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்தது. மேலும் பிபவ் குமார் கெஜ்ரிவாலின் உதவியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பா.ஜ.க.வினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி போலீசை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் நாளை (மே 17) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் பிபவ் குமார் ஆஜராக தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.