'மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் என்.சி.பி. தனித்து போட்டியிடும்' - அஜித் பவார்
|மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் என்.சி.பி. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் 27 மாநகராட்சிகள், 25 ஜில்லா பரிஷத்கள் மற்றும் ஓரிரு நகராட்சிகளுக்கான தேர்தல்கள் சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளன. இந்நிலையில் மராட்டிய மாநில ஊரக, உள்ளாட்சி தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்.சி.பி.) தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "மக்களவை தேர்தலில் 'மகாயுதி' கூட்டணி கட்சிகளுடன் இணைந்து என்.சி.பி. போட்டியிட்டது. எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம். இருப்பினும் ஊரக, உள்ளாட்சி தேர்தல்களில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம்" என்று தெரிவித்தார். மேலும் சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தலுக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என என்.சி.பி. கட்சி தொண்டர்களிடம் அஜித் பவார் கேட்டுக்கொண்டுள்ளார்.