< Back
தேசிய செய்திகள்
ஷிண்டே அரசு, பின்னால் இருப்பவரால் ஓட்டப்படும் 2 சக்கர வாகனம் - தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்
தேசிய செய்திகள்

ஷிண்டே அரசு, பின்னால் இருப்பவரால் ஓட்டப்படும் 2 சக்கர வாகனம் - தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்

தினத்தந்தி
|
3 July 2022 4:09 AM IST

ஏக்நாத் ஷிண்டே அரசு, பின்னால் உட்கார்ந்து இருப்பவரால் ஓட்டப்படும் 2 சக்கர வாகனம் என தேசியவாத காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.

2 சக்கர வாகனம்

மராட்டியத்தில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை 3 சக்கர வாகன ஆட்சி என பா.ஜனதா விமர்சித்து வந்தது. இந்தநிலையில் பா.ஜனதாவுடன் இணைந்து சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்து உள்ளார். இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று உள்ளனர்.

புதிதாக அமைந்துள்ள இந்த ஆட்சி குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறியதாவது:-

பா.ஜனதா மகாவிகாஸ் அகாடி கூட்டணியை வெவ்வெறு திசைகளில் செல்லும் 3 சக்கர ஆட்டோ என கூறியது. தற்போது சிவசேனா அதிருப்தி அணி தலைமையில் அமைந்துள்ள ஆட்சியும் மாற்றி அமைக்கப்பட்ட 2 சக்கரவாகனம் தான். புதிய அரசு பின்னால் உட்கார்ந்து இருக்கும் நபரால் ஓட்டப்படும் 2 சக்கர வாகனம்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி தான் உண்மையான சிவசேனா. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் செயலுக்காக மாதோஸ்ரீ சென்று உத்தவ் தாக்கரேவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மகாவிகாஸ் கூட்டணி கவிழ்ந்த நேரத்தில் சரத்பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதும், சிவசேனா தலைவர்கள் அனில் பரப், சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை பிடியில் வைக்கப்பட்டதும் தற்செயலாக நடந்ததா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்