பள்ளி மாணவர் மத்தியில் தேசபக்தியை வளர்க்க, பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் - என்சிஇஆர்டி பரிந்துரை
|ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கு அவர்களிடையே தேசபக்தி இல்லாததே காரணம் என்று என்சிஇஆர்டி அமைப்பின் தலைவர் கூறினார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பள்ளிக் கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்று என்சிஇஆர்டி பரிந்துரைத்துள்ளது.
என்சிஇஆர்டி அமைப்பின் தலைவர் ஐசக் இது குறித்து கூறியதாவது:-
சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை சேர்த்து மாணவர்களுக்கு கற்பிக்க குழு வலியுறுத்தியுள்ளது. பதின்ம வயது (டீன் ஏஜ்) பருவத்தில் மாணவர்கள் தங்கள் சுயமரியாதை, தேசபக்தி மற்றும் தேசத்தின் பெருமையை வளர்த்துக்கொள்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கு அவர்களிடையே தேசபக்தி இல்லாததே காரணம். எனவே, அவர்கள் தங்கள் வேர்களைப் புரிந்துகொள்வதும், அவர்களின் தேசம் மற்றும் கலாசாரத்தின் மீதான அன்பை வளர்ப்பதும் முக்கியம்.
எங்கள் முன்னுரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட சமூக விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அது உன்னதமானது. எனவே, வகுப்பறைகளின் சுவர்களில் அதை (ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை) எழுதுவதற்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். இதனால் அனைவரும் புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் முடியும்.
இவ்வாறு ஐசக் கூறினார்.