எங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டால் நடவடிக்கை - என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை
|பதிப்புரிமை சட்டத்தை மீறும்வகையில் எங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையே, என்.சி.இ.ஆர்.டி.யின் போலி பாட புத்தகங்கள் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில், என்.சி.இ.ஆர்.டி. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் காணப்படும் பாடப்புத்தகங்களை சில சுயநல வெளியீட்டாளர்கள், என்.சி.இ.ஆர்.டி.யின் அனுமதியின்றி தங்கள் பெயரை போட்டு அச்சிட்டு வருகிறார்கள்.
அப்படி எங்கள் பாடப்புத்தகங்களை முழுமையாகவோ, பகுதியாகவோ அச்சிட்டு விற்பனை செய்பவர்கள், முறையான பதிப்புரிமை அனுமதி பெறாமல், பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்தை தங்களது பதிப்புகளில் பயன்படுத்துபவர்கள் ஆகியோர் பதிப்புரிமை சட்டத்தை மீறியவர்கள் ஆவர்.
அவர்கள் மீது பதிப்புரிமை சட்டத்தின்கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல், இத்தகைய போலி பாடப்புத்தகங்களில் உள்ளடக்கம் தவறாக இருக்கலாம். பள்ளி கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிரானதாக இருக்கலாம். ஆகவே, பொதுமக்கள் இத்தகைய போலி புத்தகங்களை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
யாரேனும் இந்த போலி புத்தகங்களையோ, ஒர்க்புக்கையோ கண்டால், என்.சி.இ.ஆர்.டி.க்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.