சத்தீஸ்கரில் நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா பாராட்டு
|சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர்,
சத்தீஸ்கரின் கன்கர் மாவட்டம் ஷொட்டிபிதியா பகுதியில் உள்ள ஹபடொலா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று மதியம் 2 மணியளவில் ஹபடொலா வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்தனர். அதேவேளை, என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், நக்சல்கள் சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
இன்று சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் ஏராளமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை துணிச்சலுடன் வெற்றிகரமாகச் செய்த பாதுகாப்புப் படையினரை நான் வாழ்த்துகிறேன். காயமடைந்த துணிச்சலான வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
இளைஞர்களின் வளர்ச்சி, அமைதி மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தின் மிகப்பெரிய எதிரி நக்சலிசம். பிரதமர் மோடியின் தலைமையில், நக்சலைட்டுகளின் கோரப்பிடியில் இருந்து நாட்டை விடுவிக்க உறுதி பூண்டுள்ளோம். " இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.