சத்தீஸ்கரில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை கொளுத்திய நக்சலைட்டுகள்..!!
|முதல்கட்ட விசாரணையில் வாகனங்களை எரித்துவிட்டு தப்பியோடியவர்கள் நக்சலைட்டுகள் என தெரிய வந்தது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் பான்சி நகரில் சாலை அமைக்கும் பணி நடந்தது. வடமாநிலத்தவர்கள் உள்பட பல தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருந்து சாலை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் அதிகாலை 1 மணியளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாமுக்குள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தீப்பந்தங்களுடன் அத்துமீறி ஊடுருவினர்.
பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்திற்கும் சரமாரியாக தீ வைத்துவிட்டு தப்பியோடினர். தீயில் கருகி 14 வாகனங்கள் எலும்புக்கூடாகின. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் வாகனங்களை எரித்துவிட்டு தப்பியோடியவர்கள் நக்சலைட்டுகள் என தெரிய வந்தது.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேரில் கண்ட சாட்சிகளின்படி, அடையாளம் தெரியாத 40 முதல் 50 பேர் உள்ளிட்ட சில ஆயுதம் ஏந்தியவர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 14 வாகனங்கள் உள்ளிட்ட இயந்திரங்கள், லாரிகள், பொக்லைன்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர் என்று கூறப்படுகிறது.