விவசாயி வீட்டிற்குள் புகுந்த நக்சலைட்டுகள்; உணவு சாப்பிட்டு.. செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு சென்றதால் பரபரப்பு
|விவசாயி வீட்டுக்குள் புகுந்த நக்சலைட்டுகள் அவரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் 6 பேர் கொண்ட நக்சலைட்டு கும்பல் கடபா தாலுகா கெம்பாரு கிராமம் அருகே உள்ள செரு கிராமத்திற்குள் புகுந்தனர்.
அங்குள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் காட்டி அந்த வீட்டில் இருந்த விவசாயியை மிரட்டினர். பின்னர் இரவு உணவை அங்கேயே சாப்பிட்ட அவர்கள், தங்களது செல்போன்களையும் சார்ஜ் செய்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் அந்த வீட்டில் இருந்தனர். பின்னர் அவர்கள் விவசாயியின் வீட்டில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுபற்றி அந்த விவசாயி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார், நக்சலைட்டு ஒழிப்பு படையினர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். நக்சலைட்டு ஒழிப்பு படையினர் நடத்திய விசாரணையில் போலீசாரால் தேடப்படும் நக்சலைட்டு கும்பல் தலைவனான விக்ரம் கவுடா, லதா முண்டுகாரு ஆகியோர் தலைமையில் அந்த நக்சலைட்டு கும்பல் அங்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.