< Back
தேசிய செய்திகள்
2026 மார்ச்சுக்குள் நக்சலைட்டுகள் இல்லாத நாடு:  அமித்ஷா பேச்சு
தேசிய செய்திகள்

2026 மார்ச்சுக்குள் நக்சலைட்டுகள் இல்லாத நாடு: அமித்ஷா பேச்சு

தினத்தந்தி
|
24 Aug 2024 10:07 PM IST

நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது, உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் நக்சலைட்டுகளின் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சத்தீஷ்காருக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என திட்டமிடப்பட்டது. இதன்படி, அவர் சத்தீஷ்காருக்கு நேற்று புறப்பட்டார். இன்றைய தினம் ராய்ப்பூரில் உள்ள மகாபிரபு வல்லபாச்சார்யா ஆசிரமத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், நக்சலைட்டுகள் பாதிப்புள்ள மாநிலங்களின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒன்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது.

இதில், சத்தீஷ்கார் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் மற்றும் துணை முதல்-மந்திரி விஜய் சர்மா, மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய், தலைமை செயலாளர்கள் மற்றும் சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் மராட்டிய மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சத்தீஷ்காரில் கடந்த ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நக்சலைட்டு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. நடப்பு ஆண்டில் இதுவரை 142 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் மந்திரி அமித்ஷா கூறும்போது, நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு மற்றும் சத்தீஷ்கார் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது, இதுபோன்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவது, அதில் ஏற்படும் சவால்களை நீக்குவது ஆகியவற்றிற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.

இடதுசாரி மற்றும் நக்சலைட்டுகளை எதிர்கொள்ளும் இரக்கமற்ற அரசியலுடன் கூடிய இறுதி தாக்குதலுக்கான நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார்.

நாட்டில் நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில், முதல் 10 ஆண்டுகளில் 6,617 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் குடிமக்கள் உயிரிழந்தனர். இது 70 சதவீதம் குறைந்துள்ளது. நம்முடைய போராட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது என நம்புகிறேன். 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுகளிடம் இருந்து நாட்டை முழு அளவில் விடுவிக்க நமக்கு திறன் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்