பீகார், ஜார்க்கண்ட்டில் நக்சல்வாதம் முடிவுக்கு வந்துவிட்டது - மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா
|கிசான்கஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு செக்போஸ்ட்களை தொடங்கி வைத்து மந்திரி அமித் ஷா பேசினார்.
பாட்னா,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக பீகார் மாநிலம் சென்றுள்ளார். அமித் ஷாவின் பயணம் 2024 லோக்சபா தேர்தலுக்கான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் பாஜக ஆட்சியை இழந்த பிறகு அமித்ஷாவின் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பல்வேறு இகழ்ச்சிகளை தொடங்கி வைத்து அவர் பேசினார். கிசான்கஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு செக்போஸ்ட்களை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பீகார் , ஜார்க்கண்ட்டில் நக்சல்வாதம் முடிவுக்கு வந்துவிட்டது. சகஸ்திர சீமா பால்(எஸ் எஸ் பி) வீரர்கள் நக்சல்களை எதிர்த்து கடுமையாக போராடி முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். நேபாளம் மற்றும் பூடான் எல்லையை ஒட்டிய பகுதிகளி கடும் சூழலில் அவர்கள் பணி புரிந்துள்ளனர்.
நேபாளம் மற்றும் பூடான் உடன் இந்தியாவின் திறந்தவெளி எல்லையாக இங்குள்ள பகுதிகள் உள்ளன. அவ்வழியாக கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்ககள் நடைபெறுவதை தடுக்க அவர்கள் சிறப்பாக கண்காணிக்கின்றனர்.
இவ்வாறு பேசினார்.
முன்னதாக, பீகார் மாநிலம் பூர்னியாவில் உள்ள ரங்கபூமி மைதானத்தில் நடைபெற்ற "ஜன் பவ்னா பேரணி"யில் உரையாற்றிய போது, முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இருவரையும் கடுமையாக சாடினார். தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் முதுகில் குத்திய நிதிஷ் பாபு, இன்று ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.