சத்தீஷ்காரில் நக்சல் தாக்குதல்: 2 வீரர்கள் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்
|சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய எல்லைப் பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று தேடுதல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள டர்ரெம் பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் வெடிகுண்டு தாக்குதலில் ராய்ப்பூரை சேர்ந்த பரத் சாஹு மற்றும் நாராயண்பூரை சேர்ந்த சத்யர் சிங் காங்கே ஆகிய 2 வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதில் படுகாயமடைந்த வீரர்கள் பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் மேல்சிகிச்சைக்காக ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், வீரர்களின் தியாகம் வீண் போகாது என்றும், நக்சலைட்டுகளை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார். சத்தீஷ்காரில் இந்த ஆண்டு இதுவரை 139 நக்சலைட்டுகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.