நவராத்திரி கொண்டாட்டம்: கர்பா நடனம் ஆடிய மகன் திடீர் உயிரிழப்பு; அதிர்ச்சியில் தந்தையும் மரணம்
|மராட்டியத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனம் ஆடிய மகன் திடீரென உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தையும் மரணம் அடைந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
பால்கர்,
மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் நகரில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், குளோபல் சிட்டி வளாகத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் மணீஷ் நராப்ஜி சோனிக்ரா என்பவர் (வயது 35) நடனம் ஆடியுள்ளார்.
அவருடன் அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா (வயது 66) என்பவரும் உடனிருந்து உள்ளார். இந்நிலையில், திடீரென மணீஷ் நராப்ஜி நடனம் ஆடியபடியே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால், பதறியடித்து மகனை தூக்கி கொண்டு அவரது தந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணீஷ் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நராப்ஜி அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்து உள்ளார்.
இதன்பின்னர், அவர்கள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் திடீரென உயிரிழந்த வருத்தத்தில் தந்தையும் மரணம் அடைந்தது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இடையே பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.