நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட நபர்களை கொன்ற கொலையாளிகளை பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்: எம்.பி. நவ்நீத் ராணா
|இந்த வழக்கில் உள்துறை மந்திரி அமித் ஷா முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று எம்.பி. நவ்நீத் ராணா கேட்டுக் கொண்டார்.
நாக்பூர்,
மராட்டிய மாநிலம் அமராவதி பகுதியில் மருந்து கடை நடத்தி வந்த உமேஷ் கோல்ஹே என்பவர் ஜூன் 21 அன்று கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானின் உதய்பூரில் கன்னையா லால் கொல்லப்பட்டதுக்கும் உமேஷ் கோல்ஹே படுகொலைக்கும் ஒரே காரனம் தான். அவர்கள் இருவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டதற்காக படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உமேஷ் கோல்ஹேவின் கொலையாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று அமராவதி எம்.பி. நவ்நீத் கவுர் இன்று கூறினார்.
இதன்மூலம் நாட்டில் இதுபோன்ற குற்றத்தை யாரும் செய்ய துணியமாட்டார்கள். இந்த வழக்கில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, அமராவதியில் உள்ள உமேஷ் கோல்ஹேவின் இல்லத்தின் முன் சுயேச்சை மக்களவை எம்.பி. நவ்நீத் கவுர் மற்றும் அவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ ஆகியோர் இன்று அனுமான் சாலிசா பக்திப்பாடலை பாடினர்.
ஜூன் 21 அன்று இரவு 10:30 மணியளவில் உமேஷ் கோல்ஹே(54), மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்தியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இந்த வழக்கின் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் ஜூலை 15ம் தேதி வரை என்ஐஏ காவலில் வைக்க மும்பை சிறப்பு கோர்ட்டு கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது.