சிறையில் இருந்து விடுதலை ஆனார் சித்து
|முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கொலை வழக்கில் 10 மாதம் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் நேற்று விடுதலை ஆனார். அவரை பல மணி நேரம் காத்து நின்று ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சித்துவுக்கு ஓராண்டு சிறை
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்பவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து (வயது 59). இவர், 1988-ம் ஆண்டு, பாட்டியாலா நகர சாலையில் காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் 65 வயதான குர்னம் சிங் என்பவரைத் தாக்கியதில், அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கில் சித்துவை விசாரணை நீதிமன்றம் 1999-ல் விடுதலை செய்தது. ஆனால் மேல்முறையீட்டில், சித்துவுக்கு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அங்கு சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு மே 19-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த ஆண்டு மே மாதம் 20-ந்தேதி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
காத்துக்கிடந்த ஆதரவாளர்கள்
சித்து 10 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், சிறையில் நல்ல நடத்தையுடன் இருந்ததால் முன்கூட்டியே நேற்று விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக பாட்டியாலா சிறையில் சித்துவை வரவேற்று அழைத்துச்செல்வதற்காக நேற்று காலையில் இருந்து அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் திரண்டனர். அவர்கள் 8 மணி நேரம் காத்துக்கிடக்க நேரிட்டது.
விடுதலை
காத்துக்கிடந்தவர்களில் அமிர்தசரஸ் எம்.பி. குர்ஜித் ஆஜ்லா, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சாம்சர் சிங் டுல்லோ, மொகிந்தர் சிங் காய்பீ, லால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. நவ்தேஜ் சிங் சீமா உள்ளிட்டோர் அடங்குவர். மாலை 5.53 மணிக்குத்தான் சித்து சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். அப்போது அவருக்கு அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் தடபுடல் வரவேற்பு அளித்தனர். "சித்து வாழ்க" என அவர்கள் கோஷமிட்டனர்.