முதல்-மந்திரி பதவியில் 23 ஆண்டுகள்: ஜோதிபாசு சாதனையை முறியடித்த நவீன் பட்நாயக்
|நாட்டிலேயே 23 ஆண்டு கால முதல்-மந்திரி பதவி வகித்த பெருமைக்கு உரியவராக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திகழ்கிறார்.
நாட்டிலேயே நீண்டகாலம் முதல்-மந்திரி பதவி வகித்த பெருமைக்கு உரியவராக சிக்கிம் முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங் திகழ்கிறார். அவர் 24 ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியில் இருந்தார். சாம்லிங்குக்கு அடுத்தபடி 2-வதாக அதிக காலம் முதல்-மந்திரியாக பதவி வகித்தவராக மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு இருந்தார். அவர் மொத்தம் 23 ஆண்டுகள் 137 நாட்களுக்கு அந்தப் பதவியில் இருந்தார்.
அவரின் அந்த சாதனையை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று தாண்டினார். 5-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் நவீன் பட்நாயக், அந்தப் பதவியில் 23 ஆண்டுகள் 138 நாட்களை நேற்று எட்டினார். சாம்லிங், ஜோதிபாசுவுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரி நாற்காலியில் அமர்ந்த மூன்றாவது தலைவர் என்ற பெருமைக்கு உரியவராகவும் நவீன் பட்நாயக் இருக்கிறார். அவரது பிஜு ஜனதா தளம் வருகிற 2024 சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்றால், நாட்டிலேயே அதிக காலம் முதல்-மந்திரியாக இருப்பவராகிவிடுவார் நவீன் பட்நாயக்.