காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசார கூட்டங்கள்: பா ஜனதா ஏற்பாடு
|இன்று அவசர நிலை நினைவு தினத்தை ஒட்டி, காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசார கூட்டங்கள் நடத்த பா ஜனதா ஏற்பாடு செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது அமலில் இருந்த 21 மாதங்களும் பத்திரிகை தணிக்கை, அரசியலமைப்பு உரிமைகள் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக விரோத சம்பவங்கள் அரங்கேறின.
அவசர நிலை அமல்படுத்தியதன் நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பா ஜனதா சார்பில் இன்று நாடு முழுவதும் பல்வேறு பிரசார கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் முக்கியமாக டெல்லியில் உள்ள பா ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சித்தலைவர் ஜே பி நட்டா உரையாற்றுவார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் அனில் பலூனி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவின் வலுவான ஜனநாயகத்தில் ஒரு மறக்க முடியாத கருப்பு அத்தியாயமாக அவசர நிலை இருக்கிறது. அவசர நிலை காலத்தில் மக்கள், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சிறைபிடித்தல் உள்ளிட்ட எண்ணற்ற கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டனர்' என குற்றம் சாட்டியுள்ளார்.