மணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
|வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை தொடர்பாக மணிப்பூர் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மணிப்பூர் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.