காங்கிரஸ் தொண்டர்கள் 3-வது நாளாக போராட்டம்
|டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் 3-வது நாளாக அமைதி வழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் தொடர்ந்து 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. 2-வது நாளில் நேற்று 8½ மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த விசாரணைக்காக, அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் ஆகியோர் பெருமளவு குவிக்கப்பட்டு இருந்தனர். அணுகுசாலைகள் அனைத்தும் தடுப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தன.
இதற்கிடையே ராகுல்காந்தியிடம் 3-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் 3-வது நாளாக அமைதி வழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜராக உள்ள நிலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.