நாசி வழி கொரோனா தடுப்பூசி: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான விலை நிர்ணய விவரம் வெளியீடு
|பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் இரண்டரை ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2-வது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், பூஸ்டர் தடுப்பூசியாகவும் போட வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.
இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, அந்நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்வதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் வழங்கியது.
இதனால், நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் என்ற நாசி வழி கொரோனா தடுப்பூசியின் விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதன்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோசாக இதனை பயன்படுத்தப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு இதன் விலை ரூ.800 என விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325-க்கு இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படும்.
வருகிற ஜனவரி 4-வது வாரத்தில் இருந்து இந்த இன்கோவேக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்.
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களும், பூஸ்டர் டோசாக நாசி வழியேயான இந்த தடுப்பூசியை எடுத்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுதவிர, கொரோனாவுக்கு எதிராக முதல் மற்றும் 2-வது டோசாகவும் மற்றும் பூஸ்டர் டோசாகவும் இன்கோவேக் தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது, உலக அளவில் முதன்முறையாகும்.