'இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி' - முகேஷ் அம்பானி புகழாரம்
|இந்தியாவின் பொருளாதாரம் 2047-ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலரை எட்டும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
காந்திநகர்,
குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் 'துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு' இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"வெளிநாட்டினர் புதிய இந்தியாவைப் பற்றி சிந்திக்கும்போது, புதிய குஜராத்தைப் பற்றி சிந்திக்கின்றனர். இந்த மாற்றம் அனைத்தும் ஒரே ஒரு தலைவரால் நிகழ்ந்தது. அவர் இன்று உலகளாவிய தலைவராக உயர்ந்துள்ளார். இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தை திருபாய் அம்பானி என்னிடம், "குஜராத் உனது தாய் நிலம். அதுவே உனது பணியிடமாகவும் இருக்க வேண்டும்" என்று கூறுவார். இன்று நான் கூறுகிறேன், ரிலையன்ஸ் என்றுமே ஒரு குஜராத்தி நிறுவனம்தான்.
கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.12 லட்சம் கோடி தொழில் முதலீடு செய்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் எப்போதும் குஜராத்தின் சொத்து. இந்தியாவின் பொருளாதாரம் 2047-ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலரை எட்டும்."
இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்.