போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீரிடம் நடந்து வந்த விசாரணை நிறைவு
|போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
புதுடெல்லி,
நியூசிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி 3 பேர் டெல்லியில் பிடிபட்டனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 50 கிலோ எடையுள்ள போதைப்பொருளை கைப்பற்றினார்கள்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பதும், கடந்த 3 ஆண்டுகளில் இந்த கும்பல் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி டெல்லியில் கைது செய்தனர். அடுத்த சில நாட்களில் அவருடைய கூட்டாளி சதானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட குடோனில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே ஜாபர் சாதிக் மற்றும் சதானந்தம் ஆகிய இருவரையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்குக்கும், இயக்குனர் அமீருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அமீர் ரம்ஜானை காரணம் காட்டி விசாரணையை தள்ளிவைக்குமாறு கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் அமீர் நேற்று காலை டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜர் ஆனார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது அமீரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்குடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?, எத்தனை ஆண்டுகளாக பழக்கம்? என்பது குறித்து கேட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கும், அமீரும் இணைந்து ஓட்டல் தொழிலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கு அவர்கள் செய்த முதலீடு விவரங்கள் பற்றியும் கேட்கப்பட்டன.
மேலும் ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற படத்தை அமீர் இயக்கியுள்ளார். இந்த படத்துக்காக அமீருக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு? கொடுக்கப்பட்ட முன்பணம் எவ்வளவு என்பதை பற்றியும் விசாரித்துள்ளனர்.
இப்படியாக விசாரணை மதியம் மற்றும் மாலை நேரத்தை கடந்து இரவிலும் தொடர்ந்தது. அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குனர் அமீர் பிடி கொடுக்காமல் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் மேலும் பல கிடிக்குப்பிடி கேள்விகளை அமீரிடம் முன்வைத்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு அமீர் ஆஜராகும் போது அவருடைய வக்கீலும் உடன்சென்றுள்ளார்.