< Back
தேசிய செய்திகள்
பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசாக அளித்த நாராயண மூர்த்தி
தேசிய செய்திகள்

பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசாக அளித்த நாராயண மூர்த்தி

தினத்தந்தி
|
18 March 2024 4:37 PM IST

இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள நாராயண மூர்த்தியின் 0.40 சதவீத பங்குகளில் 0.04 சதவீத பங்குகள் பேரனுக்கு சென்றுள்ளன.

பெங்களூரு,

இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி. அவருடைய மனைவி சுதா மூர்த்தி. இந்த தம்பதியின் மகன் ரோகன் மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி அபர்ணா கிருஷ்ணனுக்கும், கடந்த ஆண்டு நவம்பரில் ஆண் குழந்தை பிறந்தது.

இதனால், நாராயண மூர்த்தி தம்பதி தாத்தா பாட்டி ஆனார்கள். ரோகன் மூர்த்தி தம்பதி தங்களுடைய மகனுக்கு ஏகாகிரா ரோகன் மூர்த்தி என பெயரிட்டு உள்ளனர்.

இந்நிலையில், 4 மாத பேரனுக்கு நாராயண மூர்த்தி ரூ.240 கோடி மதிப்பிலான இன்போசிஸ் நிறுவன பங்குகளை பரிசாக அளித்துள்ளார். இதனால், நாராயண மூர்த்தியின் 0.40 சதவீத பங்குகளில் 0.04 பங்குகள் பேரனுக்கு சென்றுள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தில், நாராயண மூர்த்தியின் பங்கு 0.36 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது.

பேரனிடம் 15 லட்சம் பங்குகள் உள்ளன. இதனால், நாராயணன் மூர்த்தியின் குடும்பத்தில் மிக இளம் வயதில் கோடீசுவரரான நபராக அவருடைய பேரன் உள்ளார். இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியில் இன்போசிஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாட்டின் 2-வது பெரிய தொழில் நுட்ப நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

ஏகாகிரா, நாராயண மூர்த்தியின் 3-வது பேரக்குழந்தையாகும். அவருடைய மகள் அக்சதா மூர்த்தி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்