குஜராத்தின் அமுலுடன் நந்தினி பால் நிறுவனம் இணைப்பதாக சொல்வதா?; உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு குமாரசாமி கண்டனம்
|குஜராத்தை சேர்ந்த அமுலுடன் நந்தினி பால் நிறுவனத்தை இணைப்பதாக கூறியதாக உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கோரமான அநீதி
நிலம், நீர், மொழி குறித்து கன்னட மற்றும் கர்நாடகத்தின் மீது எப்போதும் பா.ஜனதா தாக்குதல் நடத்தி வருகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனத்தை குஜராத்தின் அமுல் நிறுவனத்துடன் இணைப்பதாக கூறியுள்ளார். இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்து வருபவர் அமித்ஷா. எல்லை பிரச்சினையில் மராட்டியத்தை கண்டிக்காதவர். இந்த நிலையில் நந்தினியை அமுலுடன் இணைக்கும் முயற்சி கன்னடர்களுக்கு இழைக்கப்படும் கோரமான அநீதி ஆகும்.
கர்நாடகத்தை குஜராத் ஆக்கும் சதி நடக்கிறது. வளர்ச்சியில் குஜராத்திற்கு கர்நாடகம் போட்டியாக திகழ்கிறது. அதனால் கர்நாடகத்தை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அமித்ஷாவுக்கு இருப்பது போல் தெரிகிறது. நாட்டின் வேறு எந்த மாநிலம் மீதும் இல்லாத வெறுப்பு கர்நாடகத்தின் மீது மட்டும் இருப்பது ஏன்?. கன்னடர்களை எதிரிகளை போல் பார்க்கிறார்கள்.
அமித்ஷா சதி
கன்னடர்களை குஜராத்திகளுக்கு அடிமையாக மாற்ற அமித்ஷா சதி செய்துள்ளார் என்பது எனது சந்தேகம்.
நந்தினி கன்னடர்களின் உயிர்நாடி. இதில் தலையிட்டால் பா.ஜனதா அழிந்துவிடும். நாட்டை ஆட்சி செய்த கன்னடர்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை. கர்நாடகத்தை ஆக்கிரமித்து கொள்வது, தொழில் வளர்ச்சியில் கர்நாடகத்தை தடுப்பது போன்ற முயற்சிகள் வெற்றி பெறாது.
கர்நாடகத்தின் வங்கிகளை வட இந்திய வங்கிகளுடன் இணைத்தனர். இப்போது நந்தினியையும் இணைத்து கொள்ள பார்க்கிறார்கள். நந்தினி கன்னடர்களின் அடையாளம். இதை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.