நிலப்பட்டாவில் பெயர் மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய நகரசபை பெண் கமிஷனர் கைது
|நிலப்பட்டாவில் பெயர் மாற்ற ரூ.3 லட்சம் வாங்கிய நகரசபை பெண் கமிஷனரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
சித்ரதுர்கா-
நிலப்பட்டாவில் பெயர் மாற்ற ரூ.3 லட்சம் வாங்கிய நகரசபை பெண் கமிஷனரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
நிலப்பட்டா மாற்ற...
சித்ரதுர்கா மாவட்டம் ெசல்லகெரே தாலுகா பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இந்தநிலையில் தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்ற நாகராஜ் முடிவு செய்தார். இதற்காக அவர் செல்லகெரே நகரசபையில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நகரசபை கமிஷனர் லீலாவதியிடம் பரிசீலனைக்கு சென்றது. இந்தநிலையில் தந்தை பெயரில் உள்ள நிலத்தை உனது பெயருக்கு மாற்ற ரூ.5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என நாகராஜிடம் லீலாவதி கூறியுள்ளார்.
இதையடுத்து அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என நாகராஜ் லீலாவதியிடம் தெரிவித்தார். பின்னர் ரூ.3 லட்சம் தருவதாக நாகராஜ் அவரிடம் கூறினார்.
ரூ.3 லட்சம் லஞ்சம்
பின்னர் லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் அவர் லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து ேலாக் அயுக்தா போலீசார் நாகராஜிடம் சில அறிவுரைகளை கூறினர். பின்னர் ரசாயன பொடி தடவிய ரூ.3 லட்சம் நோட்டுகளை நாகராஜிடம் லோக் அயுக்தா போலீசார் கொடுத்து அனுப்பினர்.
இதையடுத்து செல்லகெரே நகரசபை அலுவலகத்திற்கு சென்ற நாகராஜ், லீலாவதிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் வெளியில் உள்ளேன் மாலை 4 மணிக்கு வரும்படி நாகராஜிடம் கூறினார். இதையடுத்து நாகராஜ் மாலை 4 மணிக்கு மீண்டும் செல்லகெரே நகரசபை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கமிஷனர் லீலாவதியிடம், நாகராஜ் ரூ.3 லட்சத்தை கொடுத்தார். அதனை அவர் வாங்கினார்.
சிறையில் அடைத்தனர்
அப்போது மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் லீலாவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி லோக் அயுக்தா போலீசார் சிறையில் அடைத்தனர்.