நளின் குமார் கட்டீல் ஒரு கோமாளி; சித்தராமையா கிண்டல்
|பா.ஜனதா மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் ஒரு கோமாளி என்று காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
மங்களூரு:
பா.ஜனதா மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் ஒரு கோமாளி என்று காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
சாமி தரிசனம்
மங்களூருவில் உள்ள கோகர்ணநாதா கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சிறப்பு விமான மூலம் பஜ்பே விமான நிலையத்தில் வந்து இறங்கினார். இதையடுத்து கோவிலுக்கு சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர், மங்களூரு அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவினரை நான் விமர்சனம் செய்தது போன்று என்னையும் அவர்கள் விமர்சனம் செய்தனர். எடியூரப்பாவை ராஜா ஹூலி என்று அழைக்கின்றனர். அவர் என்ன ஹூலியா (புலியா). புலியாக இருந்தும் மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியையும் வாங்கி தர முடியவில்லை.
நிதியை பெற்று தரவேண்டும்
அதை விட நாய் விசுவாசமானது. மேலும் தைரியமானது. அந்த தைரியத்துடன் சென்று மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு தேவையான நிதியை பெற்று தரவேண்டும். அதற்காக நாய் குட்டியாக இருந்து, வாலாட்ட கூடாது. நடுங்கவும் கூடாது. தைரியமாக பேசி நிதியை பெறவேண்டும். இதை தான் நான் கூறினேன். நாய் என்று கூறி முதல்-மந்திரியை விமர்சனம் செய்யவில்லை. நளில் குமார் கட்டீல் அடுத்த மூன்று மாதத்தில் நான்(சித்தராமையா) சிறைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார். நளின் குமார் கட்டீல் ஒரு கோமாளி. அவரது கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்பும் வேலையை நீதிமன்றம் செய்யும். தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கேட்கின்றனர். இம்முறை தேர்தலில் கட்சி மேலிடம் கூறும் தொகுதியில் போட்டியிடுவேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.