< Back
தேசிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை காங்கிரஸ் அரசு தியாகம் செய்கிறது; நளின்குமார் கட்டீல் எம்.பி. குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை காங்கிரஸ் அரசு தியாகம் செய்கிறது; நளின்குமார் கட்டீல் எம்.பி. குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
16 Sept 2023 3:25 AM IST

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை காங்கிரஸ் அரசு தியாகம் செய்கிறது என்று நளின்குமார் கட்டீல் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

மங்களூரு:

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை காங்கிரஸ் அரசு தியாகம் செய்கிறது என்று நளின்குமார் கட்டீல் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

சிராடி சுரங்கப்பாதை திட்டம்

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிராடியில் தேசிய நெடுஞ்சாலைக்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு 2 முறை ஆய்வு மேற்கொண்டது. முதல் ஆய்வின்போது, ரூ.3 ஆயிரம் கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 2-வது ஆய்வின்போது ரூ.12,500 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிராடி மலைப்பாதை திட்டத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதையும், மற்ற பகுதிகளில் மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக இந்த திட்டத்துக்கு ரூ.2,500 கோடி விடுவிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மத்திய அரசின் லட்சிய திட்டமான சிராடியில் மெகா சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு (2024) தொடங்கும்.

275 விவசாயிகள் தற்கொலை

எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் மந்திரி டி.சுதாகர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா மவுனம் சாதிக்கிறார். மந்திரி செலுவராயசாமி மீது அதிகாரிகள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு சர்வாதிகாரிகள் மற்றும் மோசடிகாரர்களால் மட்டுமே நிறைந்துள்ளது.

அரசை கேள்வி கேட்கும் ஊடகங்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களில் 275 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனாலும் அரசு அமைதியாக உள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை காங்கிரஸ் அரசு தியாகம் செய்கிறது.

காவிரி விவகாரம்

195 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது. இது சரியல்ல. மாநிலம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசு அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஆறுகள் வறண்டு போய் உள்ளன. எனவே அரசு கர்நாடகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் குறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்