கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தோல்வி; நளின் குமார் கட்டீல் குற்றச்சாட்டு
|கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தோல்விடைந்துவிட்டது என்று மாநில பா.ஜனதா தலைவர் நளின் குமார் கட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.
மங்களூரு:
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தோல்விடைந்துவிட்டது என்று மாநில பா.ஜனதா தலைவர் நளின் குமார் கட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.
இணையதளம் முடக்கம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மாநில பா.ஜனதா தலைவர் நளின் குமார் கட்டீல் கூறியதாவது:-
மாநில அரசின் கிரகலட்சுமி திட்ட சலுகையை பெற, பொதுமக்கள் விண்ணப்பம் செய்யும் சேவா சிந்து இணையதளம் முடக்கப்படுவதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல காங்கிரஸ் அரசு அமல்படுத்தவுள்ள அன்னபாக்ய திட்டத்தை தடுக்க மத்திய அரசு முயல்வதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்காக போராட்டமும் நடத்தினர். மாநில அரசின் இந்த போராட்டத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் காங்கிரஸ் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் அரசு எப்போதும் மாநில அரசின் இணையதளத்தை முடக்குவது இல்லை. இது கர்நாடகத்தில் மட்டுமில்லை. எந்த மாநிலத்திலும் நடந்தது இல்லை.
காங்கிரஸ் தோல்வி
பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்றவேண்டும்.உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு அரிசி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுவது சரியில்லை. பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, ரூ.3-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ரூ.27-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டது. தற்போது இலவச அரிசி வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. அந்த தோல்வியை மறைப்பதற்கே மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல கிரக லட்சுமி திட்டமும் தோல்வியடையும். இவ்வாறு அவர் கூறினார்.