< Back
தேசிய செய்திகள்
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை; நளின்குமார் கட்டீல் விளக்கம்
தேசிய செய்திகள்

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை; நளின்குமார் கட்டீல் விளக்கம்

தினத்தந்தி
|
24 Jun 2023 9:49 PM GMT

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று நளின்குமார் கட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று நளின்குமார் கட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.

சோமண்ணா கோரிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்திருந்தது. இதன் காரணமாக மாநில தலைவராக இருந்து வரும் நளின்குமார் கட்டீல் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. நளின்குமார் கட்டீல் கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றிருந்தாலும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தொடர்ந்து பதவியில் நீடித்தார்.

இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் மந்திரி சோமண்ணா தனக்கு மாநில தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிட தலைவர்களை வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரம் குறித்து பல்லாரியில் நேற்று பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

தோல்விக்கு நான் பொறுப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததால், அதற்கு நான் பொறுப்பு ஏற்று இருந்தேன். தோல்விக்கான காரணங்கள் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு தகவல் அளித்துள்ளேன். மாநில தலைவர் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் என்று சோமண்ணா கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்.

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அடைந்த தோல்வி எதிர்பாராத ஒன்றாகும். காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைவர்கள் சமரச அரசியலில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து பேசப்படும். எக்காரணத்தை கொண்டும் பா.ஜனதா சமரச அரசியலில் ஈடுபட்டதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜினாமா செய்யவில்லை

ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பொறுப்பு ஏற்று தனது தலைவர் பதவியை நளின்குமார் கட்டீல் ராஜினாமா செய்திருப்பதாகவும், இதுபற்றி பா.ஜனதா தலைமைக்கு அவர் கடிதம் எழுதி இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், மாநில தலைவர் பதவியை தான் ராஜினாமா செய்யவில்லை என்று நளின்குமார் கட்டீல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நளின்குமார் கட்டீல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பல்லாரியில் நான் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது சட்டசபை தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். இதுபற்றி பா.ஜனதா தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக மட்டுமே தெரிவித்தேன். மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக நான் கூறவில்லை. அதுபோன்று வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி உள்ளது.

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. சரியான நேரத்தில், பா.ஜனதா தலைமை சரியான முடிவு எடுத்து மாநில தலைவரை நியமிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்