மைசூரு-மங்களூரு ரெயிலை வெள்ளிக்கிழமை இயக்க தென்மேற்கு ரெயில்வேக்கு பொதுமக்கள் கோரிக்கை
|பெங்களூருவில் இருந்து மைசூரு வழியாக மங்களூருவிற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை வெள்ளிக்கிழமை இரவும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மங்களூரு-
பெங்களூருவில் இருந்து மைசூரு வழியாக மங்களூருவிற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை வெள்ளிக்கிழமை இரவும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரெயில் போக்குவரத்து
தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பலர் பெங்களூரு, மைசூரு நகரில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெங்களூரு, மைசூருவில் இருந்து தட்சிண கன்னடாவிற்கு தினசரி வந்து செல்பவர்களும் உள்ளனர். வாரம் ஒரு முறை வந்து செல்பவர்களும் உள்ளனர். குறிப்பாக இவர்களில் வாரம் ஒரு முறை வந்து செல்பவர்கள்தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மைசூருவில் இருந்து மங்களூருவிற்கு வரும் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை சரியான ரெயில் போக்குவரத்து வசதி இல்லை என்று கூறப்படுகிறது.
அதாவது பெங்களூருவில் இருந்து மண்டியா, மைசூரு வழியாக மங்களூருவிற்கு (வண்டி எண்:-16585) வாரத்திற்கு 6 நாட்கள் (மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை அன்று இரவு மட்டும் இயக்கப்படுவது இல்லை. அன்று ஒரு நாள் மட்டும் அதிக ரெயில் இயக்கப்படுவதால், பெங்களூரு-மைசூரு- மங்களூரு ரெயில்கள் இயக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை இயக்க வேண்டும்
அதேநேரம் பெங்களூருவில் இருந்து ஹாசன், குனிகல் வழியாக மங்களூருவிற்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் மைசூருவில் இருந்து மங்களூருவிற்கு வெள்ளிக்கிழமை இரவு மட்டும் ரெயில்கள் இல்லை என்பது பொதுமக்களின் குறைகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தட்சிண கன்னடா மாவட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
அதாவது வாரவிடுமுறையில் பலர் சொந்த ஊருக்கு வருவார்கள். மேலும் பலர் தட்சிண கன்னடாவில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கு வார விடுமுறையில் வருவது உண்டு. அவர்களின் தேவை கருதி, வெள்ளிக்கிழமை இரவும் பெங்களூரு-மைசூரு-மங்களூரு இடையே ரெயில் இயக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலவச பஸ் பயணம்
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது:- வெள்ளி, சனிக்கிழமைகளில் மைசூருவில் இருந்து மங்களூருவிற்கு பஸ்சில் வரவேண்டும் என்றால் ரூ.1000 வரை செலவாகிறது. இதே ரெயில் என்றால் ரூ.250 முதல் ரூ.300 வரை செலவு செய்தால் போதும். தற்போது அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இதனால் வார விடுமுறையில் பஸ்களில் இருக்கைகள் கிடைக்காது. எனவே ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி பெங்களூருவில் இருந்து மைசூரு வழியாக மங்களூருவிற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை, வெள்ளிக்கிழமை இரவும் இயக்கவேண்டும் என்று தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.