< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மைசூரு மன்னருக்கு சொந்த வீடு, கார் இல்லை...வெளியான சொத்து மதிப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

மைசூரு மன்னருக்கு சொந்த வீடு, கார் இல்லை...வெளியான சொத்து மதிப்பு

தினத்தந்தி
|
2 April 2024 12:18 PM IST

குடகு தொகுதியில் மைசூரு மன்னர் யதுவீர் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூரு,

பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மன்னர் யதுவீர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.4.99 கோடி என குறிப்பிட்டுள்ளார். மேலும் சொந்த வீடு, விவசாய நிலம், கார் இல்லை என தெரிவித்துள்ளார்.

மைசூரில் உள்ள குடகு நாடாளுமன்ற தொகுதியில் மைசூரு மன்னர் யதுவீர் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் மைசூரு அரண்மனைக்கு சென்றனர். அங்கு குடகு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மன்னர் யதுவீருக்கு பி படிவம் வழங்கினர். அந்த படிவத்தை மன்னர் யதுவீர், தனது தாயாரும், மகாராணியுமான பிரமோதா தேவி முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு மன்னர் யதுவீர் மைசூரு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, கலெக்டர் கே.வி.ராஜேந்திராவிடம் டம்மி வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில், தனது சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 303 என தெரிவித்துள்ளார். தன்னிடம் ரூ.1 லட்சம் கையிருப்பாக உள்ளது. தனது பெயரில் உள்ள 2 வங்கி கணக்குகளில் ரூ.23 லட்சத்து 55 ஆயிரம் இருப்பு உள்ளது. மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான பங்குகள், நிறுவனங்களின் பத்திரங்கள் இருப்பதாக மன்னர் யதுவீர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னிடம் 4 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் கூறியுள்ளார். ஆனால் மன்னராக இருந்தாலும் தனக்கு சொந்தமாக வீடு, விவசாய நிலம், கார், வணிக கட்டிடங்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் கடன் பெறவில்லை என்றும், வருமானவரி பாக்கி இல்லை எனவும், தன் மீது எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் மன்னர் யதுவீர் தெரிவித்துள்ளார். அவரது மனைவி திரிஷிகா குமாரி பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றே மன்னர் யதுவீர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும், முறைப்படி இன்று (புதன்கிழமை) மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அரண்மனை ஜோதிடர் கூறியதால், மன்னர் யதுவீர் நேற்று டம்மி மனுவை தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்