வயநாட்டில் பூமிக்கு அடியில் மர்ம சத்தம் - மக்கள் அச்சம்
|தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், நிலச்சரிவை தொடர்ந்து வயநாட்டில் பூமிக்கு அடியில் மர்ம சத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சத்தம், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேட்டுள்ளது. அதாவத, குறிச்சியார் மலை, பிணங்கோடு மூரிக்காப், அம்புகுத்தி மலை, எடக்கல் குகைகளை சுற்றிய பகுதிகளில் இன்று திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது போல் பூமிக்கடியில் இருந்து திடீரென்று சத்தம் கேட்டுள்ளது. எனினும், நிலஅதிர்வு ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
இதையடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி ஓடியுள்ளனர். மேலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.