< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் பெண் என்ஜினீயர் மர்ம சாவு
தேசிய செய்திகள்

பெங்களூருவில் காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் பெண் என்ஜினீயர் மர்ம சாவு

தினத்தந்தி
|
6 Jun 2022 2:54 AM IST

பெங்களூருவில் காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் பெண் என்ஜினீயர் மர்மமாக உயிர் இழந்தார். இதுதொடர்பாக கணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெண் என்ஜினீயர்

பெங்களூரு சுப்பிரமணியநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அஞ்சுன் பாணியார். இவரது மனைவி அஞ்சு (வயது 26). இவர், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அஞ்சுன் மற்றும் அஞ்சு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் அஞ்சுவின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு பேசிய அஞ்சுன், அஞ்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிக்மகளூரு மாவட்டம் கடூரில் இருந்து பெங்களூருவுக்கு விரைந்து வந்தனர். தங்களது மகளின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதார்கள்.

கணவர் மீது போலீசில் புகார்

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுப்பிரமணியநகர் போலீசார் விரைந்து அஞ்சுவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தங்களது மகளுக்கு அஞ்சுன் தொல்லை கொடுத்ததாகவும், இதுபற்றி சமீபத்தில் அஞ்சு தங்களிடம் தெரிவித்ததாகவும் போலீசாரிடம் அஞ்சு பெற்றோர் தெரிவித்தனர். மேலும் அஞ்சுவை, அவரது கணவர் கொலை செய்திருப்பதாகவும் சுப்பிரமணியநகர் போலீசில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே அஞ்சு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், 'எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. அடம் பிடித்து திருமணம் செய்தேன். அந்த அடத்தினால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அம்மா என்னை மன்னித்து விடு' என்று எழுதியிருந்தார். இதனால் அஞ்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் அஞ்சுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்