மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்கிறார்
|சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வருகிற 26-ந்தேதி மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு மைசூரு தசரா விழா
பெங்களூரு:
மைசூரு தசரா விழா
மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. விஜயதசமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இந்த தசரா விழா கர்நாடக மாநிலத்தின் பண்டிகையாக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மைசூரு தசரா விழா கர்நாடகத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. மகிஷாசூரன் எனும் அரக்கனை மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வெற்றி கொண்ட நாளைத்தான் மைசூரு தசரா விழாவாக மக்கள் கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது.
முன்பு மகிஷாசூரனின் பெயரில் இருந்துதான் மகிசூர் என்று மைசூரு அழைக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அந்த பெயர் மருவி மைசூரு என்று மாறியுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது.
15-ம் நூற்றாண்டில்...
மைசூரு தசரா விழா விஜயநகரப் பேரரசர்களால் கடந்த 15-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் என்பவர் மைசூரு தசரா விழா குறித்து "இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்ததாக அவர் குறிப்பிட்டு இருப்பதாக வரலாறு கூறுகிறது.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருவை ஆட்சிபுரிந்த உடையார் வம்ச அரசர் ராஜ உடையார் தசரா விழாவை ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கொண்டாட ஆரம்பித்தார். தற்போது ஸ்ரீரங்கப்பட்டணா மண்டியா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. தசரா கொண்டாட்டங்கள் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் இருந்துதான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அவரது ஆட்சி காலத்தில்தான் தசரா விழாவின்போது தனியார் தர்பார் நடத்தப்பட்டது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் அப்போது நடத்தப்பட்டது. யது வம்ச மன்னர்களால் கொண்டாடப்பட்டு வந்த மைசூரு தசரா விழா 1972-ம் ஆண்டுக்கு பிறகு கர்நாடக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
412-வது விழா
இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 412-வது தசரா விழாவாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டதால், இந்த ஆண்டு தசரா விழாைவ வெகு விமரிசையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் மைசூருவில் முழுவீச்சில் நடந்து வருகிறது. மைசூரு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக 14 யானைகள் வந்துள்ளன. முதற்கட்டமாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி 9 யானைகள் வந்தன. 2-வது கட்டமாக 5 யானைகள் கடந்த 6-ந்தேதி வந்தன. இந்த யானைகளுக்கு நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
26-ந்தேதி தொடக்க விழா
ஆண்டுதோறும் மைசூரு தசரா விழாவை முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அதாவது மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்கள் தூவி சிறப்பு பூஜை நடத்தி விழாவை பிரபலங்கள் தொடங்கிவைப்பார்கள்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் 26-ந்தேதி தசரா விழாவை தொடங்கிவைப்பவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. இந்த நிலையில் வரலாற்று சிறப்புமிக்க தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதுதொடர்பாக பசவராஜ்பொம்மை பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதி முர்மு தொடங்கி வைக்கிறார்
உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு கர்நாடக அரசு சார்பில் கடந்த 6-ந்தேதி கடிதமும் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த கடிதத்திற்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கிவைக்கும் நிகழ்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைப்பது உறுதியாகி இருக்கிறது. வருகிற 26-ந் தேதி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த ஆண்டு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க வருகை தருவதால், மைசூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசாருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.