தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளை ஆகஸ்டு மாத இறுதியில் மைசூரு அழைத்து வர திட்டம்
|தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளை ஆகஸ்டு மாத இறுதியில் மைசூருவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
மைசூரு:
தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளை ஆகஸ்டு மாத இறுதியில் மைசூருவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
மைசூரு தசரா விழா
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் விஜய தசமியை முன்னிட்டு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா விழாவில் வரலாறு, பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும். இந்த விழாவின் இறுதி நாளில் ஜம்புசவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் நடைபெறும்.
மைசூரு அரண்மனையில் இருந்து ராஜவீதிகள் வழியாக தீப்பந்தம் விளையாட்டுகள் நடைபெறும் பன்னிமண்டபம் வரை யானைகள் ஊர்வலமாக செல்லும். உடன் கலாசார குழுவினர், அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த ஊர்வலத்தை கர்நாடகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசிப்பார்கள்.
15 யானைகள்
இத்தகைய புகழ்பெற்ற தசரா ஊர்வலம் இந்த ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் தசரா ஊர்வலத்தில் 15 யானைகள் பங்கேற்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் 15 யானைகளை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பங்கேற்ற யானைகளில் கோபாலசுவாமி, கஜேந்திரா ஆகியவை சமீபத்தில் உயிரிழந்தன. அதுபோல் வயதாகிவிட்டதால் அர்ஜுனா இந்த முறை முதல் தசரா விழாவில் பங்கேற்காது. இதனால் அந்த யானைகளுக்கு பதிலாக புதிய யானைகளை தசரா ஊர்வலத்தில் பங்கேற்க வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
யானைகள் முகாமில் ஆய்வு
இதன் காரணமாக தசரா விழாவில் பங்கேற்க உள்ள யானைகளை பட்டியலை தயாரிக்கும் பணிகள் மைசூரு மாவட்ட வன பாதுகாவலர் மாலதி பிரியா மேற்பார்வையில் வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதாவது மாவட்ட வன அலுவலர் சவுரப் குமார் தலைமையில் வனத்துறையினர் அடங்கிய குழு ஒவ்வொரு முகாமிற்கும் சென்று தசரா விழாவில் கடந்த முறை பங்கேற்ற யானைகளின் உடல் தகுதி பற்றி நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். அத்துடன் அர்ஜுனா, கோபாலசுவாமி, கஜேந்திரா ஆகிய 3 யானைகளுக்கு மாற்றாக இந்த முறை எந்தெந்த யானைகளை தசரா ஊர்வலத்தில் பங்கேற்க வைக்கலாம் என யானைகள் முகாம்களில் உள்ள பாகன்களிடம் அந்த குழுவினர் கருத்துகளை கேட்டு வருகிறார்கள்.
ஆகஸ்டு மாதத்தில்...
இதுகுறித்து வன அதிகாரி சவுரப் குமார் கூறியதாவது:-
தசரா விழாவில் புதிய யானைகளை பங்கேற்க முடிவு செய்துள்ளோம். இதனால் யானை முகாம்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தி யானைகளை தேர்வு செய்து பட்டியல் தயாரித்து வருகிறோம். வனத்துறை அதிகாரிகள் உயர்மட்ட குழு கூட்டத்தில் எந்தெந்த யானைகளை தசரா ஊர்வலத்தில் பங்கேற்க வைக்கலாம் என இறுதி முடிவு எடுக்கப்படும்.
தற்போது நாகரஒலே வனச்சரகத்திற்கு உட்பட்ட மத்திக்கோடு, பீமனக்கட்டா முகாம்களில் ஆய்வு செய்துள்ளோம். விரைவில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ராமபுரா, குடகு மாவட்டம் துபாரே யானை முகாம்களில் ஆய்வு செய்ய இருக்கிறோம். பெண் யானைகளுக்கு கர்ப்ப பரிசோதனை செய்ய யானை முகாம் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். தசரா விழாவில் பங்கேற்க இருக்கும் யானைகள் கஜபயணமாக வருகிற ஆகஸ்டு 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மைசூருவுக்கு அழைத்துவர முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.