முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம் - பிரதமர் மோடி
|வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சத்தீஷ்காரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தேர்தலையொட்டி 700 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் மாநில காவல் துறையை சேர்ந்த 2 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள், ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்புகிறேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம்.
"சத்தீஷ்கார் மாநிலத்தில் இன்று இரண்டாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மதிப்புமிக்கது." என்று தெரிவித்துள்ளார்.