< Back
தேசிய செய்திகள்
வங்கி கணக்கில் ரூ.46 கோடிக்கு பரிவர்த்தனை: ஐ.டி நோட்டீஸ் பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி
தேசிய செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.46 கோடிக்கு பரிவர்த்தனை: ஐ.டி நோட்டீஸ் பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி

தினத்தந்தி
|
30 March 2024 10:56 AM IST

கல்லூரி மாணவர் பிரமோத் குமாரின் பான் எண், குறிப்பிட்ட நிறுவனத்தின் பான் எண்ணாக சேர்க்கப்பட்டு, பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரமோத் குமார் தண்டோடியா. கல்லூரி மாணவரான இவருக்கு அண்மையில் வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி துறையிடம் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்தது. அதில் பிரமோத் குமாரின் பான் கார்டு மூலம் மும்பை, டெல்லியில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பணப் பரிமாற்றத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என கோரி நோட்டீஸ் வந்துள்ளது.

இதன் பிறகே பிரமோத் குமாருக்கு தனது வங்கிக் கணக்கில் இத்தகைய பணப் பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் வருமான வரித் துறை தொடர்புடைய அலுவலர்களிடம் இது தொடர்பாக விசாரித்துள்ளார். அதில், பிரமோத் குமாரின் பான் எண், குறிப்பிட்ட நிறுவனத்தின் பான் எண்ணாக சேர்க்கப்பட்டு, பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரமோத் குமார், போலீஸில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "தனது வங்கிக் கணக்கில் முறைகேடாக ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக கல்லூரி மாணவரிடம் இருந்து புகார் வந்துள்ளது. அவரது வங்கிக்கணக்கு விவரங்களை ஆராய்ந்ததில் ஒரு நிறுவனம் இவரது பான் எண்ணை தவறாக பயன்படுத்தி இந்த பணப்பரிவர்த்தனையை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்