உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களுக்குள் இந்தியாவை கொண்டு வருவோம்: பிரதமர் மோடி
|ஏழை மக்களின் நலன், தொழிலாளர்கள் மரியாதை எங்கள் அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
மும்பை,
பிரதமர் மோடி கடந்த 12-ந் தேதி நாட்டிலேயே நீளமான அடல் சேது கடல்பாலத்தை திறந்து வைக்க மும்பை வந்து இருந்தார். இந்த நிலையில் ஒரு வாரகாலத்தில் 2-வது முறையாக அவர் இன்று மராட்டியம் வந்தார். அவர் சோலாப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். விழாவில் அவர் சோலாப்பூர், கும்பாரியில் ராய்நகரில் பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கட்டப்பட்ட 15 ஆயிரம் வீடுகளை பயனாளர்களிடம் ஒப்படைத்தார். இதுதவிர மாநிலம் முழுவதும் பிரதம மந்திரி யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட 90 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளையும் மாநிலத்துக்கு பிரதமர் அர்பணித்தார். இதேபோல ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 8 புதிய திட்டப்பணிகளையும் அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை நான் பார்த்தேன். நான் சிறுவனாக இருந்தபோது இதுபோன்ற வசதியான வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. மக்களின் கனவு நிறைவேறும்போது அது நமக்கு மகிழ்ச்சியை தரும். மக்களின் ஆசிதான் எனது மிகப்பெரிய சாதனை. வருகிற 22-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் போது, வீடு கிடைத்தவர்கள் அதில் விளக்கு ஏற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஏழ்மையை ஒழிக்கும் ஜோதியாக அது இருக்க வேண்டும்.
தனது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வேலையை கடவுள் ராமர் செய்தார். அதுபோல எனது அரசும் ஏழை மக்களின் நலன், உயர்வுக்காக அர்பணிக்கப்பட்டது. ஏழை மக்களின் துயரங்களை போக்கும் திட்டங்களை நாங்கள் தொடங்குகிறோம். எங்கள் ஆட்சியில் அரசின் நலத்திட்ட உதவிகளில் இடைத்தரகர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளனர்.
ஏழை மக்களின் நலன், தொழிலாளர்கள் மரியாதை எங்கள் அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. உங்கள் கனவு தான் எனது உறுதி மொழி. அதை நிறைவேற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் இந்தியா வரும். அது மோடி உத்தரவாதம் ஆகும். உங்கள் ஆசியுடன் 3-வது முறை எனது அரசு அமைந்தவுடன் அதை சாதித்து காட்டுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.