ஒடிசா மாநில மந்திரிகள் உடனிருக்க ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்; முதல்-மந்திரி நவீன் பட்நாயக்
|எனது அமைச்சரவை சகாக்கள் ஜெகநாத் சரகா மற்றும் துகுனி சாஹு ஆகியோர் இன்று வேட்பு மனுவில் கையெழுத்திட்டு நாளை நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் நாளை (24-ந் தேதி) நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் குறித்து இன்று கூறியதாவது, "ஜனாதிபதி தேர்தலுக்கு திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து, பாஜக தலைவர் ஜேபி நட்டா என்னிடம் பேசினார்.
எனது அமைச்சரவை சகாக்கள் ஜெகநாத் சரகா மற்றும் துகுனி சாஹு ஆகியோர் இன்று வேட்பு மனுவில் கையெழுத்திட்டு நாளை நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்" என்றார்.
இப்போது இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நவீன் பட்நாயக், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு தன் மந்திரிசபை முழு ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று அவர் கூறியதாவது, "ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். 'திரவுபதி முர்மு ஒடிசா மண்ணின் மகள்' என்றும், ஒடிசா மாநில மக்களுக்கு இது பெருமையான தருணம்" என்றார்.