< Back
தேசிய செய்திகள்
ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுப்பு: 3-வது நாளாக முஸ்லிம் மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுப்பு: 3-வது நாளாக முஸ்லிம் மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

தினத்தந்தி
|
29 May 2022 3:02 AM IST

ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதால் முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்து 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்தனர்.

மங்களூரு

ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதால் முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்து 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் கடந்த பிப்ரவரி மாதம் விசுவரூபம் எடுத்தது. கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஹிஜாப் அணிந்த அனுமதிக்க வேண்டும் என கூறி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தி வகுப்புகளை புறக்கணித்தனர்.

இதற்கிடையே கல்லூரிகளுக்கு மத அடையாள ஆடைகள் அணிந்து வரக்கூடாது என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மங்களூரு பல்கலைக்கழகத்திற்கு சில முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை பல்கலை நிர்வாகம் தடுத்து நிறுத்தி ஐகோர்ட்டின் உத்தரவை குறிப்பிட்டு, ஹிஜாப்பை கழற்றிவிட்டு செல்லுமாறு கூறியது. ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்தனர். இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை கண்டித்து ஏ.பி.வி.பி. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

12 முஸ்லிம் மாணவிகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூருவில் உள்ள வி.வி. அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். இந்த நிலையில் நேற்றும் 12 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய முயன்றனர்.

அவர்களை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தி, ஹிஜாப்பை கழற்றுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து வீடுகளுக்கு திரும்பி சென்றனர். தற்போது மீண்டும் ஹிஜாப் விவகாரம் விசுவரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்களில் எதிர்காலம் பாதிக்கப்படும் என கல்வி நிறுவனங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்