< Back
தேசிய செய்திகள்
கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்
தேசிய செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்

தினத்தந்தி
|
9 Jun 2024 9:35 PM IST

ஸ்ரீநாத்திற்கும், மாதவ்ராவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தனிசந்திரா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்தார். அவருக்கும், கே.ஆர். புரத்தை சேர்ந்த மாதவ்ராவ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது தனது நிறுவனத்தில் ஏலச்சீட்டு போடும்படி மாதவ்ராவை, ஸ்ரீநாத் கேட்டுள்ளார்.

மேலும் அவரிடம் ரூ.5 லட்சத்தை ஸ்ரீநாத் கேட்டு பெற்று உள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் மாதவ்ராவிடம் எந்த தொகையையும் ஸ்ரீநாத் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்ரீநாத்திற்கும், மாதவ்ராவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் மாதவ்ராவின் மனைவிக்கும், ஸ்ரீநாத்திற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீநாத், மாதவ்ராவ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதுகுறித்து மாதவ்ராவிற்கு தெரியவந்துள்ளது. இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநாத், கே.ஆர்.புரத்தில் உள்ள மாதவ்ராவின் வீட்டிற்கு சென்றார்.

ஆனால் அதன்பின்னர் மாயமானார். இதனால் பயந்துபோன ஸ்ரீநாத்தின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மாதவ்ராவ் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஸ்ரீநாத், மாதவ்ராவின் வீட்டிற்குள் நுழைந்த காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அவர் வெளியே வந்த காட்சிகள் ஏதும் இல்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் மாதவ் ராவ் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது வீட்டை பூட்டிவிட்டு மாதவ்ராவ் தப்பி ஓடியது தெரிந்தது. இதையடுத்து வீட்டிற்குள் புகுந்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரத்தக்கறைகள் இருந்தன. மேலும் மாதவ் ராவ், ஆந்திராவில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவான மாதவ் ராவை பிடித்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது மாதவ் ராவ் கொடுத்த ரூ.5 லட்சத்தை ஸ்ரீநாத் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் மாதவ் ராவ் வீட்டில் இல்லாத சமயங்களில் ஸ்ரீநாத் வந்து, மாதவ் ராவின் மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் குறித்து அறிந்த மாதவ் ராவ், ஸ்ரீநாத்தை பிடித்து கண்டித்துள்ளார். மேலும் தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஸ்ரீநாத் மறுத்துள்ளார். இதனால் சம்பவத்தன்று அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மாதவ் ராவ் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு ஸ்ரீநாத்தை தாக்கினார். இதில் நிலைகுலைந்து விழுந்த ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை துண்டு, துண்டாக மாதவ் ராவ் வெட்டியுள்ளார். பின்னர் 3 சாக்குப்பைகளில் அவரது உடல் பாகங்களை பிரித்து எடுத்தார். மேலும் அவற்றை அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

போலீசிடம் சிக்காமல் இருக்க அவர் ஆந்திராவில் சென்று பதுங்கி இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாதவ் ராவை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு ராமமூர்த்திநகர் போலீசுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கால்வாயில் வீசப்பட்ட ஸ்ரீநாத்தின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மங்களூருவில் இருந்து நிபுணர்கள் குழு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும் 3 நாட்கள் ஆகியும் உடல் பாகங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்