< Back
தேசிய செய்திகள்
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6 வயது சிறுவன் படுகொலை - பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6 வயது சிறுவன் படுகொலை - பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
28 Jan 2024 4:29 PM IST

சிறுவனின் உடலில் ஆங்காங்கே காயங்களும், சிகரெட்டால் வைக்கப்பட்ட தீக்காயங்களும் இருந்தன.

பெங்களூரு,

பெங்களூரு மாநிலம் ராமநகர் ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் உடல் கிடந்தது. இதுபற்றி 17 வயது சிறுவன் ஒருவன் ராமநகர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தான். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அவர்கள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக போலீசார் சோதனை நடத்தியதில் சிறுவனின் உடலில் ஆங்காங்கே காயங்களும், சிகரெட்டால் வைக்கப்பட்ட தீக்காயங்களும் இருந்தன. எனவே சிறுவனை மர்மநபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே சிறுவனின் உடல் கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்த 17 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அந்த 17 வயது சிறுவனை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது சம்பவத்தன்று 17 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தான்.

அப்போது கொலையான 6 வயது சிறுவனும் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுவனிடம் பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு 17 வயது சிறுவன் அழைத்து சென்றுள்ளான். பின்னர் அங்கு வைத்து சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் அந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டு இருக்கிறான்.

இதனால் சிறுவன் கத்தி கூச்சலிட்டுள்ளான். அப்போது சிகரெட்டை கொண்டு சிறுவனின் உடலில், அந்த 17 வயது சிறுவன் சூடு வைத்து இருக்கிறான். மேலும் தொடர்ந்து கத்தியதால் அவனை அந்த 17 வயது சிறுவன் சரமாரியாக தாக்கி உள்ளான். இதில் காயமடைந்த சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் உடலை, அந்த 17 வயது சிறுவன் ரெயில் தண்டவாளம் அருகே வீசியுள்ளான்.

பின்னர் போலீசாருக்கு அந்த 17 வயது சிறுவன் தகவல் கொடுத்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. ஆனால் கொலையான 6 வயது சிறுவன் குறித்து வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்