குடிபோதையில் இரட்டை கொலை; தொழிலாளி கைது
|தீர்த்தஹள்ளி அருகே குடிபோதையில் கல்லால் தாக்கி 2 பேரை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா:
தீர்த்தஹள்ளி அருகே குடிபோதையில் கல்லால் தாக்கி 2 பேரை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர்கள் கொலை
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா குருவள்ளி புத்திகே மடத்தின் அருகே விஷ்வகர்மா சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்த மஞ்சப்பா (வயது 45), பீரப்பா (46) என்ற 2 கூலி தொழிலாளிகள் வேலை பார்த்து வந்தனர். இவர்களை தவிர மேலும் சிலர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மஞ்சப்பா மற்றும் பீரப்பா ஆகிய 2 பேரும் கட்டிடத்தின் அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதை பார்த்த கூலி தொழிலாளிகள் உடனே தீர்த்தஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சக கூலி தொழிலாளிகளுக்குள் ஏற்பட்ட தகராறில், 2 பேரும் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
தொழிலாளி கைது
இதையடுத்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரித்தனர். அப்போது இவர்களுடன் வேலை பார்த்து வந்த ராஜப்பா (58) என்பவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜப்பா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்த போலீசார், அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை ராஜப்பாவை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ராஜப்பா, தன்னுடன் வேலை பார்த்து வந்த மஞ்சப்பா, பீரப்பா ஆகியோரை கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து ராஜப்பாவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தீர்த்தஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜப்பாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.