< Back
தேசிய செய்திகள்
ஆந்திர ரவுடியை கொல்ல முயன்ற 3 பேர் கைது
தேசிய செய்திகள்

ஆந்திர ரவுடியை கொல்ல முயன்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
11 Dec 2022 3:42 AM IST

பெங்களூருவில் ஆந்திர ரவுடி உள்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் ஆந்திர ரவுடி உள்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

துப்பாக்கி சூடு

ஆந்திர மாநிலம் மதனபள்ளியை சேர்ந்தவர் ஜெயசந்திர ரெட்டி. இவரது மகன் சிவசங்கர் ரெட்டி என்கிற சிவா ரெட்டி. இவர் பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார். மேலும் புதிதாக வீடு ஒன்றையும் கட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சிவசங்கரும், அவரது கார் டிரைவரான அசோக் ஆகியோர் சீ.கே.ஹள்ளி பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் சிவசங்கர், அசோக் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிவசங்கர், அசோக்கை கொலை செய்ய முயன்றதாக மதனப்பள்ளியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

17 வயதில் கொலை செய்தவர்

கைதான 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது சிவசங்கரின் தந்தையான ஜெயசந்திர ரெட்டிக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பைரா ரெட்டி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு பைரா ரெட்டியை சிவசங்கரும், ஜெயசந்திர ரெட்டியும் சேர்ந்து கொலை செய்தனர். பைரா ரெட்டியை கொலை செய்த போது சிவசங்கருக்கு 17 வயது தான்.

இந்த கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கரும், ஜெயசந்திர ரெட்டியும் ஜாமீனில் வெளியே வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில் ஜெயசந்திர ரெட்டியை, பைரா ரெட்டியின் குடும்பத்தினர் வெட்டி கொலை செய்தனர். இந்த நிலையில் தனது தந்தை கொலைக்கு பழிவாங்க பைரா ரெட்டியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை சிவசங்கர் வெட்டி கொலை செய்தார். இது அவர் செய்த 2-வது கொலையாகும். அப்போது சிவசங்கருக்கு வயது 18.

ரவுடி பட்டியலில் பெயர்

இதன்பின்னர் 2021-ல் பைரா ரெட்டி குடும்பத்தை சேர்ந்த மேலும் ஒருவரை சிவசங்கர் கொலை செய்தார். இந்த வழக்கில் கைதான சிவசங்கர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் சிவசங்கர் பெயர் மதனபள்ளியில் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்று உள்ளது.

பின்னர் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்த சிவசங்கர் கே.ஆர்.புரத்திற்கு வந்து புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். இதுபற்றி அறிந்த பைரா ரெட்டியின் குடும்பத்தினர் 3 பேர் கே.ஆர்.புரத்திற்கு வந்து சிவசங்கர், அசோக் மீது துப்பாக்கியால் சுட்டது தெரியவந்து உள்ளது. கைதான 3 பேர் மீதும் கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்