< Back
தேசிய செய்திகள்
நடுரோட்டில் மாமியார் அடித்து கொலை
தேசிய செய்திகள்

நடுரோட்டில் மாமியார் அடித்து கொலை

தினத்தந்தி
|
9 Nov 2022 3:14 AM IST

ராமநகர் அருகே நடுரோட்டில் வைத்து உருட்டு கட்டையால் மாமியாரை தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

ராமநகர் அருகே நடுரோட்டில் வைத்து உருட்டு கட்டையால் மாமியாரை தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவனை பிரிந்த பெண்

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா பெட்டேகவுடன தொட்டியை சேர்ந்தவர் ரத்தினம்மா (வயது 46). இவரது மகன் மானஷா. ரத்தினம்மா தனது மகளை கனகபுராவை சேர்ந்த சுக்கி என்ற வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். திருமணத்திற்கு பின்பு கனகபுராவில் சுக்கியும், மானஷாவும் வசித்து வந்தனர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக சுக்கியுடன் வாழ பிடிக்காமல் பெட்டேகவுடன தொட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மானஷா வந்து விட்டார். மனைவியை தன்னுடன் வாழ அனுப்பி வைக்கும்படி மாமியார் ரத்தினம்மாவிடம் சுக்கி பலமுறை கேட்டு வந்துள்ளார். ஆனால் தனது மகளுக்கு சுக்கி தொல்லை கொடுத்து வருவதால், அவருடன் அனுப்பி வைக்க ரத்தினம்மா மறுத்து விட்டார்.

மாமியார் கொலை

இதன்காரணமாக மாமியார் மீது சுக்கி கடும் ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் பெட்டேகவுடன தொட்டி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ரத்தினம்மா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுக்கி, அவரது உறவினர் செல்வராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து நடுரோட்டில் வைத்து ரத்தினம்மாவை உருட்டு கட்டையாலும், கல்லாலும் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.

இதில், தலை மற்றும் உடலில் பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருமகன் கைது

தகவல் அறிந்ததும் கோடிஹள்ளி போலீசார் விரைந்து வந்து ரத்தினம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமியார் ரத்தினம்மாவை சுக்கி கொலை செய்து வெறிச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கோடிஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுக்கி மற்றும் செல்வராஜை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் கனகபுராவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்