< Back
தேசிய செய்திகள்
முதியவர் அடித்து கொலை; மருமகள் கைது
தேசிய செய்திகள்

முதியவர் அடித்து கொலை; மருமகள் கைது

தினத்தந்தி
|
6 Nov 2022 12:15 AM IST

நடத்தையில் சந்தேகப்பட்டதால் முதியவரை அடித்து கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:

நடத்தையில் சந்தேகப்பட்டதால் முதியவரை அடித்து கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகம்

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா வித்யாநகர் பி-பிளாக் பகுதியில் வசித்து வருபவர் வீரேஸ். இவர் தனியார் தொழிற்சாலையில் ேவலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு சான்வி(வயது 5) என்ற மகள் உள்ளாள். வீரேசின் தந்தை சிவக்குமார்(70). இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதையடுத்து இவர் வீரேசின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனது மருமகள் ஜோதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீரேஸ் வேலை சென்று இருந்தார்.

வெந்நீரை ஊற்றி

அப்போது சிவக்குமார் மீண்டும் தனது மருமகள் ஜோதியிடம் நடத்தை குறித்து தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோதி, சிவக்குமார் படுத்திருந்தபோது அவர் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார். பின்னர் மிளகாய்ப்பொடியை அவரின் முகத்தில் போட்டுள்ளார். மேலும் வீட்டில் இருந்து உலக்கையை எடுத்து தனது மாமனாரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். இதில் சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே வீரேசுக்கு தகவல் அளித்தனர்.

கைது

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த வீரேஸ் உடனே வீட்டிற்கு வந்தார். பின்னர் இதுகுறித்து வீரேஸ் ஹிரிஹரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாமனாரை கொலை செய்த ஜோதியை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்