இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் மத்திய மந்திரி முரளீதரன் சந்திப்பு : 13-வது சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை
|இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கை மத்திய மந்திரி முரளீதரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கொழும்பு,
இலங்கையின் 75-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை முரளீதரன் சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதில் முக்கியமாக, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்தனர். குறிப்பாக 13 ஏ சட்டப்பிரிவு மற்றும் இன நல்லிணக்கம் குறித்து ரணில் விக்ரமசிங்கேவுடன் முரளீதரன் விரிவாக விவாதித்தார்.
அத்துடன் இந்த சட்ட திருத்தத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு தனது வாழ்த்துகளையும் முரளீதரன் தெரிவித்ததாக அதிபர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கொடுக்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த ரணில் விக்ரமசிங்கே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் இதற்கு புத்த மதத்தலைவர்கள் உள்ளிட்ட சிங்கள தலைவர்களிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.