ஓடும் ரெயிலில் சாகசம் செய்தபோது கை, காலை இழந்த இளைஞர்
|மும்பை மஸ்ஜித் ரெயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம், சாகசம் செய்தபோது விபத்தில் சிக்கி ஒரு கால், ஒரு கையை இழந்ததாக இளைஞர் கூறினார்.
மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் பர்ஹத் ஆசம் ஷேக். சமூக வலைத்தள பிரியரான இவர் லைக்குகளை பெறுவதற்காக ஆபத்தான சாகசங்களை செய்து அதை வீடியோ எடுத்து பதிவிட்டு வந்துள்ளார். குறிப்பாக, மும்பை ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டுச் செல்லும் உள்ளூர் ரெயில்களில் வாசல் கம்பியைப் பிடித்து தொங்கிக்கொண்டு, பிளாட்பார்மில் கால்களை தேய்த்தபடி சாகசத்தில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அப்படி ஒரு வீடியோ கடந்த சில தினங்களாக வைரலாக பரவியது. இதனையடுத்து ரெயில்வே பாதுகாப்பு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் பர்ஹத்தின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அங்கு சென்றபோது ரெயில்வே போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு கை, ஒரு காலை இழந்த நிலையில் பரிதாபமாக அமர்ந்திருந்த பர்ஹத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் நடந்ததை விசாரித்தனர். அப்போது, மஸ்ஜித் ரெயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம், சாகசம் செய்தபோது விபத்தில் சிக்கியதாகவும், இதில் ஒரு கால், ஒரு கையை இழந்ததாகவும் பர்ஹத் கூறினார்.
சமீபத்தில் வைரலான வீடியோ மார்ச் மாதம் 7-ம் தேதி சேவ்ரி ரெயில் நிலையத்தில் சாகசம் செய்தபோது எடுத்ததாகவும், கடந்த 14-ம் தேதி சமூக வலைத்தளத்தில் அப்லோடு செய்யப்பட்டதாகவும் கூறி உள்ளார்.
இது போன்று ஸ்டண்ட் செய்வது மிகவும் ஆபத்தானது என்பதற்கு இந்த வாலிபரே உதாரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi